search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூத்த மகள்"

    எச்.ஐ.வி. பாதித்த சாத்தூர் பெண்ணிடம் இருந்து 2 மாதமாக பிரித்து வைக்கப்பட்ட மூத்த மகளை, அவரிடமே மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் நேற்று ஒப்படைத்தனர். #HighCourtMaduraiBench #HIVBlood
    மதுரை:

    மதுரையை சேர்ந்த வக்கீல்கள் எஸ்.முத்துக்குமார், அப்பாஸ்மந்திரி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு எச்.ஐ.வி. தொற்றுடன் இருந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எச்.ஐ.வி. பாதித்த பெண்ணுக்கு உரிய இழப்பீடு மற்றும் சிகிச்சை வழங்கவும், தானமாக பெறப்படும் ரத்தத்தை பாதுகாப்பாக பெற கடும் விதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுக்களில் கூறியிருந்தனர்.

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எச்.ஐ.வி. பாதித்த பெண்ணை நேரில் அழைத்து தனி அறையில் வைத்து விசாரித்தனர். அப்போது, தன்னுடைய மூத்த மகளை 2 மாதமாக பார்க்காமல், மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த பெண் தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர், மூத்தமகள் ஆகியோரை ஆஜராகும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி அவர்களும், பாதிக்கப்பட்ட பெண்ணும் நீதிபதிகளின் தனி அறையில் நேற்று ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

    பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:-

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரையும், மூத்த மகளையும் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் அவர்கள் இன்று (நேற்று) ஆஜராகினர். பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்ததும், அவரது கணவர் சேர்ந்து வாழ முயற்சிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவர் தன்னை பார்த்துக்கொள்ள மாட்டார் என்று அந்த பெண் தெளிவாக கூறியுள்ளார்.

    தற்போது தன் குழந்தைகளுடன் அந்த பெண் தனது பெற்றோருடன் இருந்து வாழ்நாளை கழிக்க விரும்புகிறார். அங்கு தனது கணவர் வந்து பார்க்க எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. எனவே 2 மாதமாக பிரித்து வைக்கப்பட்டு இருந்த சிறுமி, அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படுகிறார். இந்த வழக்கில் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியின் மனநலத்துறை உதவி பேராசிரியர் கீதாஞ்சலி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் மருத்துவ அதிகாரி ரஞ்சித்ராம்குமார் ஆகியோரும் ஆஜரானார்கள்.

    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு, வேலை, இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசிடம் கேட்டு, அடுத்த விசாரணையின்போது தெரிவிக்க கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியனுக்கு உத்தரவிடப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் சார்பில் ஆஜராக, வக்கீல் ஆர்.வெங்கடேசன் நியமிக்கப்படுகிறார். அவருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணத்தை சுகாதாரத்துறை செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட பெண் எப்போது வேண்டுமானாலும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய மருத்துவ அதிகாரி ரஞ்சித்ராம்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இந்த பெண்ணை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து டாக்டர்களே உரிய முடிவை எடுக்கலாம். இந்த வழக்கு வருகிற 29-ந்தேதி (அதாவது நாளை) ஒத்திவைக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. #HighCourtMaduraiBench  #HIVBlood
    ×